உயர்கல்வியை வணிகச் சரக்காக்கும் ‘உட்டோ’ கெடுபிடியை புறக்கணித்திடுக

தேசிய கருத்தரங்கு வலியுறுத்தல்

உயர்கல்வியை முற்றிலுமாகக் கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிகச்சரக்காக மாற்றுவது தொடர்பாக உலக வர்த்தக நிறுவனத்திடம் (உட்டோ) தெரிவித்துள்ள விருப்பங்களை இந்திய அரசு விலக்கிக்கொள்ள வலியுறுத்தப்பட்டது. இந்தியாவில் கல்வியில் வணிகமயமாக்கலோடு, மதவாதம் புகுத்தப்படுவதைத் தடுக்க போராடவும் உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.

‘உயர் கல்வி எதிர்கொண்டுள்ள சவால்கள்’ பற்றிய தேசியக் கருத்தரங்கு வியாழனன்று (நவ.5) சென்னையில் நடைபெற்றது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இரண்டு அமைப்புகளும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின.
உட்டோ அமைப்பின் சேவை வர்த்தகப் பொது ஒப்பந்தத்தின் கீழ் (காட்ஸ்) உயர்கல்வியைச் சந்தை சக்திகளுக்குத் திறந்துவிடுவது தொடர்பான ஒப்பந்தம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கு இந்திய அரசு தனது விருப்பங்களைத் தெரிவித்துள்ளது. நைரோபியில் டிசம்பரில் நடைபெற உள்ள உட்டோ உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் அந்த ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், இந்தியாவில் உயர்கல்வி முற்றிலும் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பாக மாறிவிடும். சமூக அடிப்படையிலும், பொருளாதாரத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரையில் கிடைத்துவந்த உயர்கல்வி வாய்ப்புகளும் பறிக்கப்பட்டுவிடும் என்று சென்னை கருத்தரங்கில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடத்தப்படுவது ஏன், இந்தியாவின் முந்தைய கல்விக்கொள்கைகள் அதற்காக அமைக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்க, புதிய கொள்கைக்காக என வெளிப்படையான குழு அமைக்கப்படாதது ஏன் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

வாழ்த்துரை வழங்கிய கேரள மாநில முன்னாள் கல்வியமைச்சர் எம்.ஏ. பேபி, கார்ப்பரேட் சக்திகளிடம் கல்வியை ஒப்படைக்கக்கூடாது என்ற கோரிக்கைக்கான இயக்கத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றுபடுகிறார்கள், அது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என்றார். ஒரு பக்கம் போராட்டம் நடத்திக்கொண்டே, இன்னொரு பக்கத்தில், உள்ளாட்சி அதிகாரங்கள் உள்ளிட்ட, கிடைக்கக்கூடிய அதிகார வாய்ப்புகளைப் பயன்படுத்தி இதில் தலையிடுகிற முயற்சிகளையும் மேற்கொள்ளலாம் என்றார்.

கேரளத்தில் உயர்நீதிமன்றம் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியபோது, முந்தைய இடது ஜனநாயக முன்னணி அரசு அந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவந்து கட்டுப்படுத்த முடிந்தது. பின்னர் வந்த காங்கிரஸ் கூட்டணி அரசும் அதைச் செயல்படுத்த வேண்டியதாயிற்று என்று கேரள அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் பேபி.

சேவை வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தமும் அதன் விளைவுகளும் குறித்துப் பேசிய கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் சட்கோபால், இந்த ஒப்பந்தம் மாணவர்களை வர்த்தக நுகர்வோராகப் பார்க்கிற நிலையை ஏற்படுத்திவிடும் என்றார். இந்தியாவுக்குள் கல்வி நோக்கத்திற்காகவும், பண்பாட்டுப் பகிர்வு நோக்கங்களுக்காகவும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வருவதை வரவேற்கலாம். ஆனால் தற்போது அவ்வாறு வருகிற வர்த்தக அடிப்படையிலான பல்கலைக்கழக நிர்வாகங்கள் அப்பட்டமான லாப நோக்கத்திற்காகத்தான் வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய கல்விக்கொள்கை – பழைய புதிய சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றிய சென்னை கணித அறிவியல் நிறுவன அறிவியலாளர் பேராசிரியர் ஆர். ராமானுஜம், புதிய கொள்கை முன்வரைவுக்காக அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மாணவர்கள் நலன்களையோ, ஆசிரியர்களின் சேவையையோ சிறிதும் மதிக்கவில்லை என்று விமர்சித்தார். பரிந்துரைகளின் பல்வேறு அபத்தங்களையும் அவர் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.

கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் வே. வசந்திதேவி, வெளிநாட்டுப் பல்கலைக்கழக நிறுவனங்களை நுழைய விடுவது நாட்டின் உயர் தன்னாளுமைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்தார்.

‘புதிய கல்விக்கொள்கை’ புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபால், கல்விக்கட்டணம் செலுத்த முடியாத ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி, நாட்டின் கல்வி நிலை எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றார். புத்தக முதல்படியை தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் ஜி. முனுசாமி பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் எஸ். மோகனா கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார். கருத்தாளர்களை அறிமுகப்படுத்திய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்விக்கொள்கை பற்றி விவாதிக்க ஏன் அரசு நாடாளுமன்றத்தைக் கூட்டவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர்களின் பொறுப்பை வலியுறுத்தும் ‘பள்ளிக்கூடம் போகாமலே’ திரைப்படத்தை இயக்கிய ஜெயசீலன் கவுரவிக்கப்பட்டார். லயோலா கல்லூரி செயலாளர் டோமினிக் ஜீவா, கூட்டமைப்பின் ஐ.பி. கனகசுந்தரம், தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவன ஆற்றுநர் முனைவர் பி. ரத்தினசபாபதி, அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கக் கூட்டமைப்பு துணைத்தலைவர் பேராசிரியர் பொ. ராஜமாணிக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்க மேனாள் தலைவர் முனைவர் நா. மணி, பொருளாளர் கு. செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உரையாற்றினர். வே. மணி வரவேற்றார், எஸ். சக்திவேல் நன்றி கூறினார்.

தீக்கதிர் 6.11.2015

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply